அயோத்தி ராமர் கோவிலில் பூட்டான் பிரதமர் சாமி தரிசனம்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு, பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று வருகை தந்தார். ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அயோத்தியில் உள்ள பிற முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.
முன்னதாக இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் காலை 9.30 மணியளவில் அயோத்தி விமான நிலையத்திற்கு டோப்கே வந்திறங்கினார். மாவட்ட நிர்வாகத்தால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தர பிரதேச மந்திரி சூர்ய பிரதாப் ஷாஹி, அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி, எம்.எல்.ஏ. வேத் பிரகாஷ் குப்தா மற்றும் அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து, கார் மூலம் அலகாபாத் மற்றும் லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக ராமர் கோவிலை டோப்கே சென்றடைந்தார். அயோத்தியில் உள்ள ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் டோப்கே தரிசனம் செய்தார். அவருக்கு சிறப்பு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் பூட்டான் பிரதமர் டோப்கே அயோத்தியில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
No comments