கடலூர்: விவசாயியின் மனைவியை மரத்தில் கட்டிவைத்து அடித்த பெண்கள்

 


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 63). இவரது சகோதரர்களான வைத்தியநாதன், சிங்காரவேல் ஆகிய 2 பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். விவசாயிகளான இவர்கள் 3 பேருக்கும் பொதுவான நிலம் உள்ளது. இதை பாகப்பிரிவினை செய்து கொள்வது தொடர்பாக 3 பேரின் குடும்பத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில் வைத்தியநாதனின் மனைவி சின்னையாள்(47), பிரச்சினைக்குரிய இடத்தில் வீடு கட்டுவதற்கான பணியை மேற்கொண்டுள்ளார். இதற்கு சிங்காரவேலின் மனைவி செல்வராணி (55) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சின்னையாள், அவரது மகள்கள் ஜெயசித்ரா, ஜெயந்தி, அனுராதா ஆகியோர் சேர்ந்து செல்வராணியை தாக்கினர்.

மேலும் அவர் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து, அவரது கை மற்றும் கழுத்து பகுதியுடன் சேர்த்து மரத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்தனர். உருட்டு கட்டையாலும் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவரையும், அவர்கள் தாக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தபகுதியை சேர்ந்த சில பெண்கள் ஓடிவந்து செல்வராணியை மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக செல்வராணியின் மகள் கஸ்தூரி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சின்னையாள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அனுராதாவை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர். இதனிடையே சின்னையாள் வீட்டின் அருகே நடந்து சென்ற ராமரையும் ஜெயந்தி, அனுராதா மற்றும் அனுராதாவின் மகன் வைத்தீஸ்வரன் ஆகியோர் வழிமறித்து தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து ராமர் கொடுத்த புகாரின் பேரிலும் 3 பேர் மீது காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments