கோபி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மண்புழு உரம் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் மண்புழு உரம் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி வெள்ளாள பாளையத்தில் நடைபெற்றது.
கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவதயாளன் பயிற்சிக்கு தலைமை தாங்கி மண்வள மேலாண்மையில் உயிர் உரங்களின் அவசியம், பசுந்தாள் உரங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
குமரகுரு வேளாண்மை கல்லூரியின் உதவி பேராசிரியர் அருண்குமார் மண்புழுவின் வகைகள் மற்றும் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். முன்னோடி இயற்கை விவசாயிகள் கண்ணன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மண்புழு உர உற்பத்தி தொழில்நுட்பங்களுடன் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் குறித்தும் விளக்கமளித்தனர். வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் வேளாண்துறை சார்ந்த திட்டங்கள், மானிய விவரங்கள் பற்றியும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ் மண்புழு உரம் உற்பத்தியின் தொழில்நுட்பம் மற்றும் முக்கியத்துவம் பற்றியும் கூறினர்.
இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பயிற்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அங்கக வேளாண் இடுபொருட்கள் தயாரித்தல், மண்புழு உர உற்பத்தி முறைகள் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471, 6382211592 .
No comments