கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் 31-ம் தேதி பவித்ர உற்சவம் ஆரம்பம்

 


கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது. இந்த கோவில் கட்டி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த கோவில் கட்டப்பட்ட பிறகு 4-வது முறையாக இந்த கோவிலில் பவித்ர உற்சவம் என்ற திருவிழா வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

இந்த திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 3 -ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 31-ந்தேதி காலை 9 மணிக்கு ஆச்சாரிய வர்ணம் நிகழ்ச்சியும் மாலை 6.30 மணிக்கு அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

2-ம்திருவிழாவான நவம்பர் 1-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. பின்னர் காலை 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பனா திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து பவித்ர பிரதிஷ்டை நிகழ்ச்சி நடக்கிறது.

3-ம்திருவிழாவான 2-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு பவித்ர சமர்ப்பணமும் மாலை 6.30 மணிக்கு பிரகார உற்சவமும் அதைத் தொடர்ந்து யாகசாலை பூஜையும் நடக்கிறது.

4-ம் திருவிழாவான 3-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும் மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜையும் பூர்ணாஹுதி மற்றும் சிறப்பு மணி அடித்து நைவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் அர்ச்சகர்களுக்கு வெகுமானமும் சர்க்கார்களுக்கு ஆசிர்வாதமும் நடக்கிறது.

அதன் பிறகு பவித்ர உற்சவம் நடக்கிறது. அப்போது ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி விமான பிரகார உற்சவம் நடக்கிறது.

பின்னர் 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும் இரவு 8.30 மணிக்கு பூர்ணாஹுதி மற்றும் சிறப்பு மணி ஒலியுடன் விசேஷ பூஜையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து பகுமானம் அர்ச்சனையும் வெங்கடாஜலபதி சுவாமியின் தலையில் அணிவிக்கப்படும் கிரீடம் மூலம் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு ஏகாந்த சேவையும் நடக்கிறது.

இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள 7அர்ச்சகர்கள் நடத்துகிறார்கள். பவித்ர உற்சவத்துக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments