நாகை: மறுவாழ்வு மீள் குடியமர்வு தொகையை உடனே வழங்க வேண்டும்..... 3 கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு.....


 நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 570 விவசாயிகளிடம் 620 ஏக்கர் நிலங்கள்  விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டு விரிவாக்க பணிகள் நடைப்பெற்று  வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கினாலும் நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள், விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்தது.


 ஆனால் இதுநாள் வரை இழப்பீட்டுத் தொகை வழங்காதால் பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். மாவட்ட நிர்வாகம்  ஆர் அன்ட் ஆர் என்று சொல்லக் கூடிய மறுவாழ்வு மீள்குடியமர்வு இழப்பீட்டுட்டு தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்து சுமார்  ஒன்றை ஆண்டுகளாகியும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இறுதியாக 2025 அக்டோபர் மாதம் தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்திரவாதம் அளித்த நிலையில் இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கவில்லை என கூறி நரிமணம், கோபுராஜபுரம், பனங்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 1000 த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என மனு கொடுக்க வந்தனர். 


அவர்களை போலிசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளிக்க அனுமதி கேட்கப்பட்ட நிலையில் அனைவரையும் அனுப்ப முடியாது 5 நபர்கள் செல்லுங்கள் என சொல்லி மற்றவர்களை வெளியேற்றினர். தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இழப்பீட்டுத் தொகை வழங்க பிறப்பித்த ஆணையை விவசாயிகளிடம் வழங்கினார்.


2176 பயனாளிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் 40 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.108 கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி ஆணை பிறப்பித்துள்ளதால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.இது சம்மந்தமாக காளியம்மாள் பேட்டியளித்தார். போராட்ட குழு தலைவர் சக்திவேல் உடன் உள்ளார்.

நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments