நாகை அருகே திருக்குவளை-மேலப்பிடாகை சாலையில் கொட்டி உலர வைக்கப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை


நாகை மாவட்டத்தில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசனூர், வாழக்கரை, மேலவாழக்கரை, மடப்புரம், மீனம்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் உலர வைக்க கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நனைந்து சேதமடைந்துள்ளன.

திருக்குவளை-மேலப்பிடாகை செல்லும் வாழக்கரை பிரதான சாலையில் விவசாயிகள் சாலையில் நெல் உலர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மழை பெய்ததையடுத்து, அவசரமாக நெல் மணிகளை அகற்ற முடியாமல் தார்ப்பாய் கொண்டு மூடினார்.இதனால் உலர்த்தும் பணி பெரும் சிரமமாக மாறியதோடு, பெருமளவு நெல்மணிகள் நனைந்து விட்டது.இதனால் கவலையடைந்துள்ளது விவசாயிகள் அவ்வபோது லேசாக வெயில் காட்டுவதாகவும் அதில் நெல்மணிகளை உலர வைப்பது சிரமமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் அறுவடை நடைபெறுவதால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் அதிக அளவில் மலை போல் குவிந்து தேக்கமடைந்துள்ளன. இதனால் கொள்முதல் பணி தாமதமாகி வருவதாகவும், விரைவாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மழையால் பாதிப்படைந்த நெல் உலர்த்தும் பணி மற்றும் கொள்முதல் தாமதம் காரணமாக, நாகை மாவட்ட விவசாயிகள்  கவலையில் மூழ்கியுள்ளனர் .

திருக்குவளை  நிருபர் த.கண்ணன்

Post a Comment

0 Comments