கீழ்வேளூர் அருகே தேவூர், வலிவலம் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

 


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேவூர், வலிவலம், நீலப்பாடி, ராதா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், சமீப நாட்களாக பதிவாகியுள்ள காய்ச்சல் சம்பவங்களைத் தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் தீவிரமான காய்ச்சல் தடுப்பு மற்றும் லார்வா ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வலிவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலா தலைமையில் சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், பெண்கள் சுகாதார ஊழியர்கள், மற்றும் கிராம சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீடு தோறும் கணக்கெடுப்பு பணி, தண்ணீர் சேமிப்பு டேங்குகள் மற்றும் பாத்திரங்களில் கொசு லார்வா ஆய்வு, மற்றும் லார்வா அழிப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.அத்துடன், பள்ளிகள், ஆங்கன்வாடிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு, சுத்தமான குடிநீர், உலர் சூழல், மற்றும் கொசு கடியிலிருந்து பாதுகாப்பு குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலா கூறியதாவது:

காய்ச்சல் கண்ட எந்த இடத்திலும் உடனடி சுகாதார கணக்கெடுப்பு மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் வீட்டில் தண்ணீர் சேமிப்புப் பாத்திரங்களை மூடி வைக்கவும், கொசு இனப்பெருக்கம் ஏற்படாதவாறு சுத்தம் பேணவும் வேண்டும்”என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.இதன் ஒரு பகுதியாக, நீலப்பாடி மற்றும் ராதா நல்லூர் பகுதிகளில் புகை மருந்து அடிக்கும் பணி அடுத்த சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது.

தேவூர் மற்றும் வலிவலம் கிராமங்களில் தற்போது தீவிர காய்ச்சல் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதுடன், மருத்துவ குழுவினர் கிராம மக்கள் உடல்நிலை பரிசோதனை செய்து தேவையான மருந்துகள் வழங்கி வருகின்றனர்.

சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் அவர்கள் கூறுகையில்,காய்ச்சல் கட்டுப்பாட்டுக்காக லார்வா ஒழிப்பு, புகை மருந்து தெளிப்பு, மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தினசரி நடைபெறும். கிராம மக்கள் அனைவரும் இந்த முயற்சியில் ஒத்துழைக்க வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.

கீழ்வேளூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேவூர், வலிவலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சுகாதாரத்துறை மேற்கொண்டு வரும் விரிவான களப்பணியின் மூலம், காய்ச்சல் பரவலைத் தடுக்கவும், பொதுமக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கவும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருக்குவளை நிருபர் த.கண்ணன்

Post a Comment

0 Comments