கன்னியாகுமரி: மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்சார் தகவல் தொடர்பு கருவி

 


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சைமன்காலனி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன், மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், வேறு சில மீனவர்களும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குளச்சலில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் தேங்காப்பட்டணம் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்கள் விரித்த வலையில் ஆரஞ்சு நிறத்தில் உருண்டை வடிவிலான ஒரு மர்ம பொருள் சிக்கியது. இதையடுத்து அந்த பொருளை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

 பின்னர் இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கியூ பிரிவு போலீசார் மற்றும் உளவு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த உருளையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பொருள் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்திற்கு சொந்தமான கடல்சார் தகவல் தொடர்பு கருவியான டிரிப்ட்டர் மிதவை என்பது தெரிய வந்தது. இது கடல் நீரோட்டம், உப்பு தன்மை கண்டறிய நடுக்கடலில் மிதக்க விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மிதவை மீனவர்களின் வலையில் சிக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்துடன் போலீசார் அந்த டிரிப்ட்டர் மிதவையை கைப்பற்றி குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Post a Comment

0 Comments