திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமை, வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்ககணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
பக்தர்கள் கோவிலில் எவ்வித சிரமும் இன்றி சாமி தரிசனம் செய்ய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிலில் சுற்றுலா வழிகாட்டிகள் (கைடுகள்) என்ற பெயரில் பலர் பக்தர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபடுவதாகவும், பரிகாரம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி பணம் பறிப்பு செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுபம் சுந்தர் கோஷ் தலைமையில் திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் நேற்று காலை அதிரடியாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் மற்றும் நளன் தீர்த்தக்குளத்தில் சோதனை நடத்தினர்.அப்போது வழிகாட்டிகளாக வேலைபார்த்த பெண்கள், திருநங்கைகள் மற்றும் அவர்களுக்கு உதவிய கோவில் ஊழியர்கள் 3 பேர் என 15 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
தங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் 3 பேரை போலீசார் பிடித்து சென்றதை கண்டித்து திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்டண தரிசனம் வரிசையில் டோக்கன் வழங்க ஆள் இல்லாததால் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்தனர்.
எள் தீபம் டோக்கன் வழங்க ஆள் இல்லாததால் பக்தர்கள் தீபம் ஏற்றமுடியாமல் வழிப்பட்டு சென்றனர். தீவிர விசாரணைக்கு பிறகு கோவில் ஊழியர்கள் உள்பட 15 பேரையும் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகே கோவில் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

0 Comments