டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வெடிமருந்துகளை கண்டறியும் கருவிகளுடன் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான தகவல்களை ஒவ்வொரு நிமிடமும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பகிர்ந்து வருகிறோம் என்று டெல்லி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

0 Comments