திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமம், பிராமணர் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 55). இவருக்கு சுரேந்தர் (33), மனோஜ்குமார் (29) என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுகுணாக்கர் ரெட்டி இறந்து விட்டதால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சுரேந்தர் சூலைமேனியில் உள்ள தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கிரண்குமார் (18) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு தனது தாயாரின் போன் ஸ்விச் ஆப் ஆகியுள்ளது. சென்று பார் என கூறியுள்ளார்.கிரண்குமார் சென்று பார்த்தபோது சரஸ்வதி மேல் மாடியில் உள்ள படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த அவர் சுரேந்தருக்கு தகவல் கூறியுள்ளார். சுரேந்தர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் தேவராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், வலது காதில் இருந்த கம்மல் மற்றும் செல்போன் ஆகியவை திருட்டு போனதை கண்டு பிடித்தனர். மேலும் சம்பவம் நடந்த அறையில் ரத்தம் வடிந்த நிலையில் கிடந்த இரும்பு கம்பியை கைப்பற்றினர். உயிரிழந்த சரஸ்வதி உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தை சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்யும் வெங்கடேசன் (26) என்பவர் சரஸ்வதியின் வீட்டுக்கு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் வெங்கடேசனின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரை அங்கு காணவில்லை. இதற்கிடையே திருடு போன சரஸ்வதியின் செல்போன் சென்னை அமைந்தகரை பகுதியில் சிக்னல் காட்டியது.
அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு வெங்கடேசன் ஓரு ஆட்டோவில் அமர்ந்து காணாமல் போன சரஸ்வதியின் செல்போனில் தனது காதலியிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்டு சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதியை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொன்று நகைகள் மற்றும் செல்போனை திருடியது தெரிய வந்தது. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

0 Comments