நாகை அந்தணப்பேட்டையில் குடிநீர் குழாய் உடைந்து நான்கு நாட்களாக வீணாகும் தண்ணீர்..... மக்கள் அவதி


நாகப்பட்டினம் மாவட்டம் அந்தணப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் அந்தணப்பேட்டை சிவசக்தி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீரை கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கி வருகின்றனர்.

ஆனால், கடந்த நான்கு நாட்களாக அந்த குடிநீர் குழாய் உடைந்து காணப்படுவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வடிகாலில் கலந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதியில் உள்ளனர்.

முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததும், உடைந்த குழாய் சரிசெய்யப்படாததும் காரணமாக, பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மாற்று வழியாக வழங்கப்படும் கீழ்வேளூர் கூட்டுக் குடிநீர் இணைப்பும் சீராக வழங்கப்படாததால், மக்களின் துயரம் இரட்டிப்பாகியுள்ளது.

இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

அதுமட்டுமின்றி, உடைந்த குழாயிலிருந்து வெளிவரும் தண்ணீர் திடலில் தேங்கி குட்டையாக மாறியுள்ளதால், அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், சிறார்களின் உடல் நலத்துக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த கோவிலுக்குச் சொந்தமான குளமும் முறையான பராமரிப்பில்லாமல் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதி சுகாதார நிலையும் மோசமடைந்துள்ளது.

பொதுமக்கள்,“உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்யவும், நீர் வீணாகும் பிரச்சினையை நிறுத்தவும், குடிநீர் விநியோகத்தை முறையாக மேற்கொள்ளவும், மேலும் குளம் மற்றும் சுற்றுப்புற சுகாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,”எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தணப்பேட்டை பகுதியில் நோய் தொற்று அபாயம் அதிகரிக்கும் முன் ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments