தமிழகத்தில் சமீப காலமாக தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடற்கரைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களில் தள்ளுவண்டியில் உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடியவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படக்கூடிய உணவுப்பொருட்கள் தரமற்ற முறையில் விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தள்ளுவண்டியில் உணவுப்பொருட்களை வைத்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள் முறையாக உணவு பாதுகாப்புத்துறை விதியின் படி உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புதுறை உத்தரவு வழங்கியுள்ளது.
அதன்படி காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் பானிபூரி, சமோசா, ரவாலட்டு, சிப்ஸ், போண்டா, சூப், மீன், வறுத்த கறி, சிக்கன் பகோடா போன்ற உணவுப் பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடிய உரிமையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். இவர்கள் உணவு பாதுகாப்புதுறை உரிமத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும், ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் உரிமத்தை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாவிட்டாலும், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்தாலும் தள்ளுவண்டி கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 Comments