தேனி மாவட்டம், அருள்மிகு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை முதல்நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேக்கடியில், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்தினேஷன் சேருவாட் தலைமையில், இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபூ மத்யூ ,சார் ஆட்சியர் அனுப் கார்க், உத்தமபாளையம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.கலைக்கதிரவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு கேரளா மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால் குமுளி பேருந்து நிலையத்தில், பேருந்துகளின் கால அட்டவணையினை காட்சிப்படுத்த (Display) உள்ளது.
வெளியூர் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் பக்தர்களின் வாகனங்களில் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள வாகன எண் பலகைகளை மறைக்காத வகையில் புகைப்படங்கள் மற்றும் மாலைகளை அணிவித்திருக்க வேண்டும். ஈப்பு மற்றும் வாடகை வாகனங்களில் அதிக அளவில் பக்தர்களை ஏற்றி செல்லக் கூடாது. பக்தர்கள் சாலை விதிகளை பின்பற்றி, குறிப்பிட்டுள்ளவாறு மாற்று பாதைகளில் செல்ல வேண்டும்.
போக்குவரத்து பயணிகளின் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டினை (Temporary Permit) பரிவாகன் செயலி (parivaahan app) மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக தொலைதூரங்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக வாகனத்தை இயக்காமல், சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு, வாகனங்களை இயக்க வேண்டும். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் பசுமை சோதனை சாவடிகள் அமைத்து, பக்தர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டி பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க உரிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்தல் வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பிற்காக போதிய அளவில் காவலர்களை சுழற்சி முறையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது.
குறவனூத்து மற்றும் இரைச்சல் பாலம் அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் பக்தர்களை குளிக்க அனுமதிக்க கூடாது. கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி சார்பாக பக்தர்களுக்கு குடிநீர் வசதி, நடமாடும் கழிவறைகள் ஆகியன அமைக்கப்பட உள்ளது. தமிழக எல்லையில் கூடலூர் நகராட்சி சார்பில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் தக்க சுகாதார பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
அவசர நிகழ்வுகளுக்காக சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ குழுவினருடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் மூலம் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவுரை வழங்கினர்.
இக்கூட்டத்தில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், கூடலூர் நகராட்சி ஆணையாளர் முத்துலெட்சுமி, உத்தமபாளையம் வட்டாட்சியர் கண்ணன், தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments