இந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்தது. இதில் 10 பேர் பலியானார்கள். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து புண்ணியதலமான ராமேசுவரம் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ராமேசுவரம் பகுதியில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் நள்ளிரவில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மோப்ப நாய் உதவியுடன் ராமேசுவரம் ரெயில்வே நிலைய பகுதியில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.அதுபோல் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கு வாசல் பகுதியிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தீவிர சோதனைக்கு பின்னர் தான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அதுபோல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீரா தலைமையில் போலீசார் ராமேசுவரம் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதி அறைகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.மேலும் பாம்பன் கடலுக்குள் அமைந்துள்ள புதிய ரெயில் பாலத்திலும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ரெயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்தியபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதிய ரெயில் பாலத்திற்குள் ரெயில்வே பணியாளர்களை தவிர வெளிநபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் கண்டிப்பான முறையில் உள்ளே வரக்கூடாது என்றும் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி. உத்தரவின் பேரில் ராமேசுவரம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி தலைமையில் நேற்று கடலோர போலீசார் மண்டபம் முதல் பாம்பன் வரையிலான தென்கடல் பகுதியான மன்னர் வளைகுடா கடல் பகுதியில் பைபர் படகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுக்கடலில் நாட்டு படகு மற்றும் சிறிய வத்தைகளிலும் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் மீன்பிடி அடையாள அட்டை, படகின் ஆவணங்கள் உள்ளிட்டவைளையும் வாங்கி சரி பார்த்து சோதனை செய்தனர்.
தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
கடலில் சந்தேகப்படும்படியான நபர்களையோ, படகுகளையோ கண்டால் உடனடியாக கடலோர போலீசாரின் இலவச தொலைபேசி எண் 1093-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். அதுபோல் ராமேசுவரம் முதல் பாம்பன், மண்டபம், தொண்டி வரையிலான ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்துக் கப்பலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

0 Comments