டெல்லி சதிகாரர்கள் கோவையில்.? என்.ஐ.ஏ.யிடம் தகவல் கேட்ட கோவை மாநகர காவல்துறை

 


டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தீவிரமாக விசாரித்து வருகிறது.

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை போல் கோவையிலும் கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதிகாலையில் கார் வெடித்து சிதறியது. அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். உடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் வெடிமருந்துகள், முக்கிய டைரி சிக்கின. அதை வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர் அந்த காரில் கியாஸ் சிலிண்டர், வெடிபொருட்களை எடுத்து வந்து அதை பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்துக்கு கொண்டு சென்று வெடிக்க நினைத்து இருந்ததும், ஆனால் செல்லும் வழியில் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகிலேயே அந்த கார் வெடித்து சிதறியதும் தெரியவந்தது.

இந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஜமேஷா முபினுக்கு உதவியாக இருந்த கோவை உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர் பகுதிகளை சேர்ந்த முகமது தவ்பீக், பெரோஸ்கான், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், பெரோஸ் நவாஸ் இஸ்மாயில், சனோபர் அலி, ஷேக் இதயத்துல்லா, முகமது இட்ரிஸ், முகமது அசாருதீன், தாஹா சாகர், அபு ஹனிபா, பயாஸ் ரகுமான், சரண் மாரியப்பன், குன்னூர் உமர் பாரூக் உள்பட இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்புக்கு காரணமான சதிகாரர்கள் கோவைக்கு வந்தார்களா என வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமையிடம் கோவை மாநகரக் காவல்துறை விவரம் கேட்டுள்ளது. 8 பேர் 4 நகரங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்ட‌து புலனாய்வுத்துறை விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து சதிகாரர்களின் விவரம், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை, கூட்டாளிகள் யாரேனும் கோவையில் உள்ளார்களா? உள்ளிட்டவை குறித்து காவல்துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

மேலும் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments