அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் அவர்கள், இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அந்தப் பெருமைக்குரிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் (OPS) பக்கம் நின்று, அவரது தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தவர் கு.ப.கிருஷ்ணன்.சமீபகாலமாக ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாற்றுக் கட்சிகளை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், கு.ப.கிருஷ்ணனின் இந்த அரசியல் நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கு.ப.கிருஷ்ணன் அவர்கள் சாதாரண அரசியல்வாதி அல்ல; 1991 – 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.பல தசாப்த கால அரசியல் அனுபவமும், திருச்சி மண்டலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கும் கொண்ட ஒரு மூத்தத் தலைவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அந்த இயக்கத்திற்குப் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி அரசியல் வியூகங்கள், குறிப்பாகப் பிற கட்சிகளின் அனுபவம் வாய்ந்த தலைவர்களை ஈர்ப்பது, தவெக-வின் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

0 Comments