தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஷ் சோடங்கர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அவரது இந்த நிலைப்பாடு மற்றும் சமீபகாலமாக இரு கட்சித் தலைவர்களிடையே நிலவி வரும் வார்த்தை மோதல்கள் காரணமாக, கிரிஷ் சோடங்கரை மாற்றுமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய மோதல்கள் கூட்டணியின் வலிமையைப் பாதிக்கும் என திமுக தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேற்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையின் போது, தமிழக தேர்தல் களம் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குறிப்பாக, அதிகாரப் பகிர்வு மற்றும் தொகுதிப் பங்கீட்டில் உள்ள சிக்கல்களைக் களைந்து, சுமூகமான முறையில் தேர்தலைச் சந்திப்பது குறித்து ராகுல் காந்தியிடம் கனிமொழி விளக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு இரு கட்சிகளிடையேயான தற்போதைய பதற்றத்தைத் தணித்து, கூட்டணியை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.


0 Comments