தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் (பதிவு எண்: 170/93) தேனி மாவட்டக் கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி "வேலை நிறுத்த ஆயத்த மாநாடு" தேனி - கொடுவிலார்பட்டி விசிவி டவுனில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பா. ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மா. அர்ஜுனன், மாவட்ட துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் த. சரவணன் வரவேற்புரையாற்றினார். முன்னாள் மாவட்டத் தலைவர் கே. துரைராஜ் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் சு. தாமோதரன் கோரிக்கைகள் குறித்து விரிவான விளக்கவுரையாற்றினார்.
இந்த மாநாட்டில்,ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 1500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (TAPS) இணைப்பதோடு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.பணி மேற்பார்வையாளர்களுக்கு 7 ஆண்டுகள் முடிவில் தரம் உயர்த்துதல் மற்றும் உதவிப் பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
கலைஞர் கனவு இல்லத் திட்டப் பணிகளுக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 10, 2026 முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் TNEGA மாவட்டச் செயலாளர் க. முத்துக்குமார் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ச. முனிராஜ் நன்றியுரை கூறினார். இம்மாநாட்டில் மாவட்ட, வட்டார அளவிலான நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



0 Comments