சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குன்றக்குடியில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, அதிமுக மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பார்த்திபன் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் குன்றக்குடி பேருந்து நிறுத்தம் அருகே கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்றக்குடி ஊராட்சியில் சர்வே எண் 32/2 மற்றும் 32/3 ல், 40 நபர்களுக்கு இந்த இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது. பொதுவாக நிலம், வீடு இல்லாதோர்க்கு வழங்கப்படும் இந்த இலவச வீட்டு மனை பட்டாவை, இப்பகுதி திமுக நிர்வாகிகளுக்கும், அவரது வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் மற்றும் சொகுசு வீடு கட்டி வாழும் பணக்காரர்களுக்கும் வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும் குன்றக்குடி கண்மாய்க்கு வரும் நீர் வழித்தடங்களை அழித்தும் இந்த இடம் வழங்கபட்டுள்ளதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். இது குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தபோது முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என கூறிய வருவாய் துறையினர், நாளை காரைக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வருகை தருவதை ஒட்டி, அந்த நிகழ்ச்சியில் அவசர அவசரமாக பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அனைத்து கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடிக்கு வருகை தர உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் இப்பகுதியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வதை அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சிறிது நேரம் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.

0 Comments