முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயண–மாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். முதல்-அமைச்சருக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து திருப்பத்தூர் அருகே சிராவயல்புதூரில் மகாத்மா காந்தி, கம்யூனிஸ்டு இயக்க தலைவர் ஜீவானந்தம் சந்தித்த இடத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட நினைவு அரங்கத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். குன்றக்குடியில் அடிகளார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று குன்றக்குடி அடிகளார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர், காரைக்குடியில், திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட வீறுகவியரசர் முடியரசனார் சிலையை திறந்து வைத்தார். அதன்பிறகு முதல்-அமைச்சர் நேற்று இரவு காரைக்குடி அழகப்பா அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.இதனை தொடர்ந்து காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு பகுதியில் உள்ள கானாடுகாத்தானில் ரூ.61 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய கட்டிடத்தை இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் அவர் வேளாண் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.சுப்பிரமணியம் பன்னோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார்.தொடர்ந்து அவர் காரைக்குடியில், திருச்சி பைபாஸ் சாலையில் ரூ.100 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தையும் திறந்து வைத்தார். பின்னர் சட்டக்கல்லூரி அருகே புதிதாக ரூ.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மினி டைடல் பார்க் கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ரூ.13 கோடிேய 36 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள 28 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இதனை தொடர்ந்து ரூ.2 ஆயிரத்து 559 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 49 திட்டப்பணிகளை திறந்து வைத்து முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு ரூ.205 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழா ரூ.2,872 கோடிக்கான நலத்திட்டங்களை வழங்கும் வகையில் நடைபெறுகிறது.

0 Comments