திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..... ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று போட்டியினை கண்டுகளிப்பு......

 


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கே. ஆத்தங்குடி கிராமத்தில் ஸ்ரீ பூமலச்சி அம்மன் அபிஷேக ஆராதனை விழாவை முன்னிட்டு 3ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்-புதுக்கோட்டை சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு, என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 9 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 13 ஜோடிகள் என மொத்தம் 22 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. 

இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடுகளுக்கான எல்கையாக 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர். விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி  போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும்  கேடயம் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி போட்டியினைகாண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாலையின் இருபுறங்களில் நின்று  ரசித்ததோடு, சாரதிகளை உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்.இப்போட்டிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் ஊர் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments