மயிலாடுதுறை மாவட்டத்தில் “என் ஊர் என் கனவு”மாவட்ட தொலைநோக்கு திட்டம் - 2030 கருத்தரங்கம் நடைபெற்றது.
தொலைநோக்கு திட்டம் - 2030 உத்திகள் மற்றும் திட்ட ஆவணம் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், துறை சார்ந்தவர்கள், சேவை சங்க பிரதிநிதிகள் போன்றவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அரசுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்படும் வகையில் நடைபெற்ற இக்கருத்தரங்கை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விளையாட்டுத்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களை பாராட்டி நற்சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் பகுதி அளவிலான குழு கூட்டமைப்பு மூலம் அனைத்து மகளிர் குழுக்களுக்கும் மகளிர் திட்டம் சார்ந்த அனைத்து பயன்களையும் பெற்று சேர்த்தமைக்காகவும், வங்கி பெருங்கடன் 25 லட்சம் ரூபாய் மற்றும் பி.எம்.பி.எஃப்.எம்.இ திட்டத்தின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 12 லட்சம் நிதியை அனைத்து குழு உறுப்பினர்களும் பயன்பெறும் வகையில் வழங்கியது மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட பணிகளை முழு ஈடுபாட்டோடு சிறப்பாக பணியாற்றி வருவதற்காக ஆரோக்கியநாதபுரம் பகுதி அளவிலான குழு கூட்டமைப்பு பொருளாளர் மெசியா மார்கிரேட்டுக்கு அமைச்சர் மெய்யநாதன் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்நிழ்வில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தாட்கோ தலைவர் இளையராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம் முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 Comments