ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் திருச்சியில் திமுக மாநாடு இன்று மார்ச் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திமுக நிர்வாகிகள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டை ஒட்டி திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருச்சி சிறுகனூரில் இன்று திமுகவின் பிரமாண்டமான 12-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மிகப் பிரம்மாண்டமாக செய்துள்ளார்.இன்று பிற்பகல் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு நடைபெற உள்ளது. மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடி கம்பத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திமுக கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.மாநாட்டு மேடைக்கு முதல்வர் ஸ்டாலின் வருவதற்காக அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு ரேம்ப் வாக் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டுக்கு திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் கே.என்.நேரு வரவேற்புரையாற்றுகிறார்.
இம்மாநாட்டில் திமுக நிர்வாகிகள் உரையைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின் சிறப்புறையில் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட உள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி உரையாற்றுகிறார்.
2021-ம் ஆண்டு திருச்சி சிறுகனூரில் இதே இடத்தில் நடைபெற்ற திமுக மாநாட்டில்தான் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவோம் என்பது உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இம்முறையும் அதே போல முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிடுகிறார்.

0 Comments