சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாகியார் நகரைச் சேர்ந்த தாமரைச்செல்வனின் மனைவி, 21 வயதான சோனியா காந்தி, 8½ மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தனது தம்பி கார்த்திகேயனுடன் இருசக்கர வாகனத்தில் தீத்தான்பேட்டை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களுக்கு முன்னால் நெல் அறுவடை செய்யும் பெரிய இயந்திர வாகனம் சென்று கொண்டிருந்தது. அதனை பின்தொடர்ந்து சென்ற நிலையில், முன்புறத்தில் தாழ்வாக மின்கம்பி சென்றதால், அந்த இயந்திர வாகன ஓட்டுநர் திடீரென வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அந்த நெல் அறுவடை இயந்திரத்தில் அதிக சத்தத்தில் சினிமா பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னால் வாகனம் இருப்பதை கவனிக்காமல், ஓட்டுநர் திடீரென ரிவர்ஸில் இயக்கியதால், பின்னால் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 8½ மாத கர்ப்பிணியான சோனியா காந்தி பலத்த காயமடைந்தார். முதலில் அருகிலிருந்த முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி தாயும் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.
மருத்துவமனை வெளியே கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



0 Comments