ராமநாதபுரம் மாவட்டத்தில் நாராயணன் காவிரி கால்வாய் புதுப்பிப்பு..... 5 லட்சம் மக்களுக்கு உயிர் ஊட்டிய மார்டின் குழுமம் ....

 


தமிழ்நாட்டின் மிகவும் வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில், 54 கிலோமீட்டர் நீளமுள்ள நாராயணன் காவிரி கால்வாயை புதுப்பித்து, சுமார் 5 லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கும் மகத்தான பணியை மார்டின் குழுமம் சுமார் ரூ.50 லட்சம் செலவில் மேற்கொண்டு நிறைவு செய்துள்ளது.இந்த திட்டத்தின் பயன்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா  ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி பசும்பொன் ஊராட்சியில் உள்ள  மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவின் துவக்கமாக கல்லூரி மாணவர்கள் கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், பரையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து இறை வாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.



இந்த நிகழ்ச்சியில் மார்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லீமா ரோஸ் மார்டின், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், மெகா அறக்கட்டளையின் நிறுவனர் நிமல் ராகவன், ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் “கலாம் வீடு” இணை நிறுவனர் ஷேக் சலீம், மாவட்ட விவசாய சங்க செயலாளர் முத்துராமலிங்கம், நடிகர் மற்றும் ஏ.எம்.டி அறக்கட்டளை சார்பில் அருண்மொழி தேவன், பரிதி நலம் அறக்கட்டளை நிறுவனர் நாகேந்திர சேதுபதி ராஜா, மார்னிங் ஸ்டார் கல்லூரி சார்பில் அல்போன்ஸ் பாத்திமா, சமூகம் மற்றும் தமிழ் தேசிய ஆர்வலர் நெருப்புத் தமிழர் நெல்லை ஜீவா, மார்னிங் ஸ்டார் பெண்கள் கல்லூரி முதல்வர் அமளி ஆரோக்கிய செல்வி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மற்றும் இயற்கை விவசாயி ராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறியதாவது:

எங்கள் முன்னோர்கள் காளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர்கள். அப்போது ஏற்பட்ட பஞ்சத்தால் அவர்கள் பர்மாவுக்கு சென்று விவசாயம் செய்து வாழ்ந்தனர். பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளால் தமிழர்கள் பலர் உயிரிழந்ததுடன், பலர் அகதிகளாக தமிழகம் திரும்பினர். சிலர் அந்தமான் தீவுகளுக்கும், சிலர் கோவை பகுதிக்கும் குடிபெயர்ந்தனர். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தது தண்ணீர் பற்றாக்குறை தான்.

அதனால் தான் நாங்கள் சமூகப் பொறுப்பு நிதி (CSR) மூலம் இந்தகால்வாயை தூர்வாரும் பணியை மேற்கொண்டோம். இது ஒரு தொடக்கமே. நல்ல செயல்களைசெய்வோருக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்என்பதற்காக இந்த முயற்சியை செய்தோம்.அரசியலில் பணம் கொடுத்து ஓட்டு பெறும் எண்ணம் மட்டுமே இருக்கக் கூடாது. நல்லவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் நமது மன்னர்கள் மற்றும் முன்னோர்களின் சாதனைகளை மறந்து விடுகிறோம். கல்லணை போன்ற மகத்தான கட்டிடங்களை கட்டிய தமிழர்களின் பெருமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இளைஞர்களுக்கு ஊக்கமளித்தவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். அவர் ராமநாதபுரம் மண்ணில் பிறந்தவர். அதேபோல் இந்த மண்ணிலிருந்து பல திறமையானவர்கள் உருவாகிவருகின்றனர்.விவசாயத்தில் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

மேலும், ஆர்.எஸ். மங்களம் கண்மாயை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த ஊருடன் எனக்கு குடும்ப உறவும் உள்ளது. அதையும் நிச்சயமாக செய்ய முயற்சி மேற்கொள்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments