திருப்பத்தூர் அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் குடிகொண்டுள்ள மலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 10ம் மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம் அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பங்குனி 10ம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. நெடுமரம், புதூர், உடையநாதபுரம், சில்லாம்பட்டி மற்றும் ஊர்குலத்தான்பட்டி ஆகிய ஐந்து ஊர் கிராமத்தார்கள் இணைந்து இந்த மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தினர். முன்பாக கிராமத்தார்கள் மலையரசி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு கோயில் காளைகளுடன் ஊர்வலமாக மஞ்சுவிரட்டு பொட்டலுக்கு வருகை தந்தனர். 

இதனை அடுத்து தொழுவிலிருந்து முதலில் கோயில்காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 180 காளைகள் தொழுவில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும், சில்வர் குடம், பாத்திரங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. மாடுகளை அடக்குவதற்கு நான்கு குழுக்களாக 60 வீரர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆங்காங்கே வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக 400க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

 இதில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உட்பட 49 பேர் காயமுற்றனர். அவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, 13 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர், சிவகங்கை, பொன்னமராவதி, உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments