காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது கல்யாண பிரார்த்தனை தலம் என்பதால் இங்கு திருக்கோயில் சார்பிலும் உபயதாரர்கள் சார்பிலும் அடிக்கடி கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது. இதில் திருமணமாகாத பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு முருகன் அருளால் கல்யாண பாக்கியம் பெறுகின்றனர். அதனால் இத்திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
புராண காலத்தில் தேவர்களின் தலைவன் இந்திரன் வல்லக்கோட்டைக்கு வந்து முருகப் பெருமானை வேண்டி, இந்திராணியைத் திருமணம் செய்து கொண்டான். அதனால் 7 வாரங்கள் வல்லக்கோட்டைக்கு வந்து பூஜிப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது இத்திருக்கோயில் முருகப்பெருமானின் சிறப்பாகும்.
அந்த வகையில் திருமண பிராத்தனைக்காக சென்னையைச் சேர்ந்த உபயதாரர் சார்பாக ஞாயிறன்று காலை கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவருக்குப் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட பலவித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ரோஜா, சாமந்தி, மல்லிகை, சம்பங்கி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மணமக்கள் திருக்கோலத்தில் மயில் மண்டபத்திற்கு முருகப்பெருமான் எழுந்தருளினார். கல்யாண வரம்வேண்டி திராளான பக்தர்கள் மாலைகளுடன் வந்திருந்தனர்.
காலை 9.30 மணிக்கு கல்யாண உற்சவம் தொடங்கி 11.30 மணி வரை நடைபெற்றது. திருக்கோயில் தலைமை அர்ச்சகர் தலைமையில் ஐந்து அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓதினர். மங்கலவாத்தியங்கள் ஒலித்திட 11.30 மணிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. அப்போது வள்ளி மணாளனுக்கு அரோகரா தெய்வானை நாயகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு பக்தர்கள் வணங்கினர். பிறகு அவர்கள் கொண்டு வந்த மாலையை முருகப்பெருமான் திருவடியில் வைத்து தாங்கள் அணிந்து கொண்டனர்.
அதன்பிறகு கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் மூன்று முறை திருக்கோயிலை வலம் வந்தார். உற்சவத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண அட்சதை பிரசாதமும் சர்க்கரை பொங்கல், புளியோதரை பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
இந்த கல்யாண உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்கள் அறிவுரையின்படி திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
வல்லக்கோட்டை கல்யாண பிரார்த்தனை தலம் என்பதால் இங்கு அடிக்கடி கல்யாண உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



0 Comments