நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரஓடை 36ஆம் குடியிருப்பு பகுதியில் பொதுக்குளம் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, பொதுக்குளம் இல்லாததால் குளியல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மேலப்பிடாகை–திருக்குவளை பிரதான சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) நாகை மாவட்ட செயலாளர் நாக. அருட்செல்வன் மற்றும் ஒன்றிய செயலாளர் நாட்டிருப்பு குமரவேல் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.தங்களது பகுதியில் உடனடியாக பொதுக்குளம் வெட்டி, சுற்றுசுவர் மற்றும் பாதுகாப்பான படிக்கட்டுகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், இதற்கான எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழையூர் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கலைப்போம் என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வீட்டின் சாவி மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் உதயகுமார் மற்றும் கீழையூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்திற்குள் உரிய அளவீடு செய்து புலமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.இதில் விசிக நிர்வாகிகள் மடப்புரம் மதியழகன்,வாழை ரவி, பரத்குமார்,திருக்குகளை செல்லப்பா,காளிதாஸ்,ஜே.ஆனந்த்,டி.ஆனந்த,எஸ்.ஆனந்த்,பன்னீர், ரமேஷ்,உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்





0 Comments