இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அணிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்தான செல்வம்(36). இவர் நேற்று முன்தினம் இரவு குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
குவைத் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மின் உற்பத்தி நிலையங்கள் மீது நேற்று முன்தினம் இரவு ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்த சந்தான செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்து இந்திய தூதரகம் மூலம் அவரது குடும்பத்துக்கு நேற்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சந்தான செல்வத்தின் மனைவி கவுசல்யா, தனது மகன் ஜஸ்வின் (7), மகள் சாய் யுவன்யா (3) மற்றும் உறவினர்கள், கிராம மக்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.
அங்கு ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து, குவைத் நாட்டில் இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், தனது குடும்ப வாழ்வாதாரத்துக்கும், குழந்தைகளை படிக்க வைக்கவும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

0 Comments