திருநிலை திருநீல கண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்.... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்



திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் திருநிலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ திருநீலகண்டேஸ்வரர் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோர்த்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த நீர், மேள தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவனடியார்கள் மற்றும் விழா குழுவினர் முன்னிலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை, தன பூஜை ஆகியவற்றுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.



தொடர்ந்து ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கலச பூஜை, திரவியாகுதி மற்றும் வாஸ்து சாந்தி பிரவேசபலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் ஆகம விதிகளின்படி நடைபெற்றன.

யாகசாலையில் வைத்து பூஜித்து ஆராதிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் மங்கல இசை முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டன. பின்னர், மூலவர் ஸ்ரீ திருநீலகண்டேஸ்வரர் - அழகம்மை மற்றும் பரிவார மூர்த்திகளான ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "சிவ சிவா... சிவ சிவா..." என விண்ணை பிளக்கும் வகையில் பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை ருத்ராட்ச சித்தர் மற்றும் அவரது சீடர்கள் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியோர்கள்,சிவனடியார்கள், கிராம முக்கியஸ்தர்கள், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்,கலந்து கொண்டு. சாமி தரிசனம் செய்தனர்.



இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருநிலை கிராம மக்கள் மற்றும் ஆலய பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.



Post a Comment

0 Comments