இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படியும், கீழக்கரை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் குணால் உத்தம் ஷ்ரோதே, அறிவுறுத்தலின்படியும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கைகள் கீழக்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக, கீழக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய கஸ்டம்ஸ் சாலையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான கைஎன்ற முகமது கான் 32/26 என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகவேலு தலைமையில், உட்கோட்ட காவலர்கள் பாலமுருகன், சத்தியமூர்த்தி, வசந்தகுமார் மற்றும் கிரைம் டீம் காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மறைந்திருந்த முகமது கானை கைது செய்தனர்.அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மேற்படி நபர் மீது ஏற்கனவே கீழக்கரை காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.கஞ்சா விற்பனையை தடுத்து குற்றவாளியை கைது செய்த காவல் குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் வெகுவாக பாராட்டினார்.

0 Comments