சிவகங்கை பால மந்திர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி சி. மதுமிதா, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனிதநேய எண்ணத்தில் தனது நீண்ட தலைமுடியை தானமாக வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இந்த அரிய செயலை அறிந்த சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் செல்வராஜன், மாணவியை நேரில் வரவழைத்து பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பித்து பாராட்டினார். சிறுவயதிலேயே சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்ட மாணவியின் இந்த முயற்சி அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனுடன், அதே பள்ளியின் தாளாளர் எஸ்.கே. குமார் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் தங்களது உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்க உறுதிமொழி அளித்தனர். அவர்களின் இந்த மனிதநேய செயலைவும் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாராட்டி வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவமனை கண்காணிப்பாளர் தமிழ்வாணன், அனாடமி பேராசிரியர் கற்பக ஜோதி, இணை பேராசிரியர் பாரதி ராணி, ARMO வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாணவியின் தாயார் கிருஷ்ணவேணி, பாட்டி, பள்ளி தலைமையாசிரியை கோமதி பாலா ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்று மாணவியை பாராட்டினர்.

0 Comments