தமிழகம் முழுவதும் மே 8 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளன. குறிப்பாக, வறுமையான சூழலிலும் பெற்றோரின் வேலைகளுக்கு ஒத்தாசையாக இருந்து கொண்டே மாணவர்கள் பள்ளி அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
இப்பள்ளி 96.2% தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகள்:
1. I. S. சர்மி – 556 மதிப்பெண்கள் (முதலிடம்)
2. K. S. வள்ளி – 553 மதிப்பெண்கள்
3. J. பூஜாஸ்ரீ – 539 மதிப்பெண்கள்
இதில் முதலிடம் பிடித்த மாணவி சர்மி மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிகாலையில் பெற்றோருடன் வயல் வேலைக்குச் சென்றுவிட்டு, பின் 9 மணிக்கு பள்ளிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மாலை நேரங்களிலும் பெற்றோரின் வேலைக்கு உதவியாக இருந்துகொண்டே இச்சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஏற்கனவே இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரணி எம்.கே.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
இப்பள்ளி 81% தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி அளவில் சாதனை படைத்த மாணவர்கள்:
1. K. தினேஷ் – 518 மதிப்பெண்கள் (முதலிடம்)
2. R. தினேஷ்குமார் – 515 மதிப்பெண்கள்
3. D. பவன் குமார் – 511 மதிப்இப்பள்ளி
முதலிடம் பிடித்த மாணவர் தினேஷ் ஒரு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோருடன் சேர்ந்து நெசவு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே படித்து இந்த மதிப்பெண்ணைப் பெற்றுள்ளார். இவரது அண்ணனும் இதே பள்ளியில் பயின்று, தற்போது நீலகிரி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.
குடும்ப வறுமையிலும், பெற்றோரின் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு கல்வியிலும் சிறந்து விளங்கிய இந்த மாணவர்களை, அப்பகுதி கல்வியாளர்களும் பொதுமக்களும் நேரில் சந்தித்து தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.




0 Comments