திருக்குவளை அருகே 8 ஆண்டுகளுக்கு பிறகு திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்



நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே திருவாய்மூரில் அமைந்துள்ள பாடல் பெற்ற சப்த விடங்க ஸ்தலமும், அஷ்ட பைரவர் தலமாகவும் விளங்கும் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கடந்த மே 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

அல்லியங்கோதை அம்பாள் சமேத தியாகராஜ சுவாமி, தேரில் அழகிய மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, திரளான பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கும்பாபிஷேகம் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேரோட்டம், இந்தாண்டு மீண்டும் நடைபெற்றது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments