தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்றுமுன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, தமிழக சட்டசபை நேற்று கூடியது. சட்டசபை கூட்டம் நிறைவடைந்த உடன் முதல்-அமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அனைவரையும் சந்தித்தார். அரசியல் நாகரீகம், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.இந்நிலையில் விஜய் நேற்று சீமானை சந்தித்தது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி. அவர் அந்த வீடியோவில், "வணக்கம் மக்களே. இன்னைக்கு (நேற்று) முதலமைச்சர் விஜய் சில அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தார். அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் விஜய்யின் ஆதரவாளர்கள் தானே. ஆனால் உங்கள் எதிரியை (சீமான்) சந்தித்திருக்கிறாரே என்று பலர் கேட்கிறார்கள். எல்லாருக்கும் நான் இதை தனித்தனியே சொல்ல முடியாது. அதை நான் இந்த வீடியோவில் அனைவருக்கும் சொல்லிவிடுகிறேன்.
ஸ்டாலின் சார் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவரை, வைகோவை முதல் அமைச்சர் விஜய் சந்தித்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். ஆனால்,அதுக்கு அப்புறம் ஒரு அரசியல்வாதி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை.
முதலமைச்சர் விஜய் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; அது அவர்களுடைய விருப்பம், முடிவு. ஆனால் இந்த அரசியல் நகர்வு எனக்கு புடிக்க வில்லை. பரப்புரையில் திட்டிக்கொண்டு பிறகு போய் தம்பி என கட்டிப்பிடிப்பது எல்லாம் மக்களுக்கு ரொம்பவே குழம்பும். என்னுடைய விஷயத்தில் நான் எத்தனை முறை வீடியோ போட்டு என் அக்காவையும், என்னையும் காப்பாற்றுங்கள், தமிழ்நாட்டில் வாழ விடுங்கள் என எத்தனையோ வீடியோக்களை போட்டு கொஞ்சி உள்ளேன். ஆனால் அதை யாரும் செய்யவில்லை. மாறா அந்த அரசியல்வாதிக்கு நீங்கள் ஆதரவு செய்கிறீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. மக்களுக்கு நன்றி. என்னை கொச்சைப்படுத்தியவர்களுக்கு, தமிழ் நாட்டில் வாழ விடமால் செய்தவர்களுக்கு மக்களாகிய நீங்கள் பாடம் புகட்டினீர்கள்.
இதோடு நான் எல்லோரிடத்தில் இருந்து விழகுகிறேன். இதுதான் என்னுடைய கடைசி வீடியோ. இனிமேல் வாழ்வோ, சாவோ கர்நாடகாவில் பார்த்துக்கொள்கிறேன். இதுவரைக்கும் எனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய வலி என்னுடைய இடத்தில் இருப்பவர்களுக்கு தான் தெரியும். என்னுடைய எதிரியை ஒருவர் சந்தித்தால் அவரும் எனக்கு எதிரிதான். தமிழ்நாட்டுக்கு நல்லதே நடக்கட்டும். உங்களுடைய அன்பும் ஆதரவும் எப்போது என்னுடனே இருக்கட்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

0 Comments