அகற்றப்பட்ட பெயர் பலகை மீண்டும் அமைக்கப்படுமா? திருவாடானை பொதுமக்கள் கோரிக்கை


திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில், பிடாரி கோவில் தெரு பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் வைக்கப்பட்டிருந்த ஊர்ப் பெயர் பலகை (வழிகாட்டிப் பலகை) மீண்டும் நிறுவப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

​கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, இந்தப் பெயர் பலகையின் அருகில் இருந்த குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதனைச் சரிசெய்யும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, பள்ளம் தோண்டுவதற்காக அங்கிருந்த நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பெயர் பலகை தற்காலிகமாக அகற்றப்பட்டது.

​தற்போது குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு, பள்ளமும் மூடப்பட்டுவிட்டது. ஆனால், அகற்றப்பட்ட பெயர் பலகை இதுவரை அதே இடத்தில் மீண்டும் தகுந்த முறையில் மாட்டி வைக்கப்படாமல் அலட்சியமாக விடப்பட்டுள்ளது.

​இச்சாலை வழியாக ஓரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, வெளியூர்களில் இருந்து வரும் புதிய வாகன ஓட்டிகள், வழிகாட்டிப் பலகை இல்லாததால் வழி தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

​எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக தலையிட்டு, அகற்றப்பட்ட பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் முறையாக அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments