இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூபாய், 2819 கோடியே 78 லட்சத்தில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 2023 மே மாதம் துவங்கப்பட்டு தொடர்ந்து பணிகள் மும்முரமாக நடக்கிறது. இப்பணிகளை ஜூனில் முடித்து வீடுகளுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஜல் ஜீவன் திட்டத்தில், காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூபாய், 4187 கோடியில் திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கரூர் மாவட்டம் நஞ்சைபுகழூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து 50 கி.மீ.,ல் உள்ள அரவக்குறிச்சில் 135 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீரேற்றம் செய்து திண்டுக்கல், இராமநாதபுரம் என இருபிரிவுகளாக 10 லட்சம் கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
இதற்காக 3728 கி.மீ., நகர், ஊரக பகுதிகளில் குழாய் பதிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள 1580 மேல்நிலை தொட்டிகளுடன் இத்திட்டத்தில் கூடுதலாக 825 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ரூபாய், 2819 கோடியே 78 லட்சத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நகர், புறநகர் பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. 2025 டிசம்பர் முடிக்க திட்டமிடப்பட்டது. பல்வேறு நிர்வாக காரணங்களால் தொடர்ந்து பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக புறநகர் பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம், கீழக்கரை நகராட்சிகள், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, முதுகுளத்துார், மண்டபம், சாயல்குடி ஆகிய பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 2306 கிராமங்களிலும் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்கும் பணி நடக்கிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் கூறுகையில், புறநகர் பகுதியில் பணிகள் முடிந்து தற்போது சில இடங்களில் குடிநீர் வினியோக சோதனை ஓட்டமும் நடக்கிறது. நகரில் மெயின் ரோடுகளில் மட்டும் குழாய் பதிக்க வேண்டியுள்ளது.
அதுவும் வரும் ஜூனில் முடிக்கப்பட்டு அந்த மாதமே அரசுக்கு அறிக்கை அனுப்பி முதல்வர் விஜய் அனுமதி பெற்று திறப்பு விழா நடத்தப்பட்டு, வீடுதோறும் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர். இந்நிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் வடக்கூர் 1 வது வார்டு ஓதுவார் தெருவில் ஜல் ஜீவன் திட்ட குடிநீர் குழாய் பதிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து பகுதியிலும் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

0 Comments