திருச்செந்தூரில் தரிசனத்திற்கு பணம் கேட்ட அர்ச்சகர் சஸ்பெண்ட்

 


ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரமேஷ், பல்வேறு கோயில்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்புத் தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அமைச்சர் ரமேஷ் அங்கு ரகசிய ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டார். தனது காரை கோயிலுக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு, உதவியாளருடன் முகக்கவசம் அணிந்து கொண்டு சாதாரண பக்தர் போல கோயிலுக்குள் சென்றார்.அப்போது தனது உதவியாளரை அனுப்பி, “விரைவாகத் தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும்?” என்று அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரிக்க கூறினார். அவர் அமைச்சர் என்று தெரியாததால், “தலைக்கு ஆயிரம் ரூபாய்” வீதம், அமைச்சருடன் சேர்த்து மொத்தம் நான்கு பேருக்கு 4,000 ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னிடம் கையில் ரொக்கப் பணம் இல்லை என்று கூறிய அமைச்சர், சம்பந்தப்பட்ட அர்ச்சகரின் ‘ஜி-பே’ (G-Pay) எண்ணிற்கு ரூபாய் 4,000 அனுப்பிவிட்டு, அந்தப் பணப் பரிவர்த்தனை ஆதாரத்துடன் அவரை பிடித்துள்ளார். இந்த ஊழல் முறைகேட்டில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபட்டதைக் கண்டித்த அமைச்சர், கோயில் அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விளக்கக் கடிதம் எழுதி வாங்கியுள்ளார். மேலும், கோயிலின் சொத்துக்கள் மற்றும் வருவாய் உள்ளிட்டவை குறித்தும் அவர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவு விவரங்கள், புனரமைப்புப் பணிகள் மற்றும் கோயிலுக்கு இன்னும் வர வேண்டியுள்ள வருவாய் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் நாங்கள் ஒரு தொடர் ஆய்வை நடத்தி வருகிறோம். முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டாலும், பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, தரிசனத்திற்கு அனுமதி அளிக்க லஞ்சமாக ரூ.1,000 பெற்ற அர்ச்சகர் ஐயப்பன் ஐயர் தற்போது சஸ்பெண்ட் (பணி இடைநீக்கம்) செய்யப்பட்டுள்ளார். மேலும், அதற்கு உடந்தையாக இருந்த 2 வாயிற் காப்பாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களிடம் பணம் கேட்டு அராஜகம் செய்த மேலும் 2 ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments