தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் வெடித்த உட்கட்சிப் பூசல் மற்றும் பரபரப்பான அரசியல் நகர்வுகளுக்குப் இடையே, தற்போது எடப்பாடி மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பிற்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சபாநாயகரிடம் இருதரப்பும் மாறி மாறி அளித்த புகார்கள் இன்று வாபஸ் பெற கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் அதிருப்தி குரல் எழுப்பத் தொடங்கினர்.கடந்த மே 13ஆம் தேதி சட்டமன்றத்தில் புதிய அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக வாக்களிக்க அதிமுக தலைமை (கொறடா உத்தரவு) வலியுறுத்தியது. ஆனால், கட்சியின் உத்தரவை மீறி எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால், அதிருப்தி எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும், அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்ட இதற்குப் போட்டியாக, எஸ்பி வேலுமணி தரப்பிலும் சி.விஜயபாஸ்கரை கொறடாவாக அங்கீகரிக்கக் கோரியும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் சபாநாயகரின் ஆய்வில் இருந்து வந்தன.இந்தச் சூழலில், எஸ்பி வேலுமணி அணியில் இருந்த ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரி பாஸ்கர் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகிய 6 எம்எல்ஏக்கள் திடீரென எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.மறுபுறம், எஸ்பி வேலுமணி அணியில் நீடித்த மரகதம் குமாரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாகத் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, நேற்று அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்தார்.
இதனால், எஸ்பி வேலுமணி அணியில் இருந்த 25 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைந்தது. அதே நேரத்தில், மீண்டும் ஆதரவு அளித்தவர்களால் எடப்பாடி பழனிசாமி அணியின் பலம் 28 ஆக உயர்ந்தது. இந்த அதிரடி மாற்றங்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் பதற்றத்தையும் உச்சகட்ட பரபரப்பையும் ஏற்படுத்தியது.கட்சியின் பலம் குறைவதைத் தடுக்கவும், அதிமுகவின் எதிர்கால நலன் கருதியும் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் தங்கமணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் தரப்புடன் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இன்று எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை இபிஎஸ் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பு அதிமுகவினர் நேரில் சந்தித்தனர். அப்போது, தன்னை கொறடாவாக அங்கீகரிக்கக் கோரி சி.விஜயபாஸ்கர் அளித்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அதேபோல், கொறடா உத்தரவை மீறியதாக எஸ்பி வேலுமணி தரப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்ட மனுக்களும் முறைப்படி திரும்ப பெற கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த சில வாரங்களாக அதிமுகவில் நீடித்து வந்த உச்சகட்ட அரசியல் குழப்பத்திற்கும் உட்கட்சிப் பூசலுக்கும் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

0 Comments