தேனி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் முழு நிலவு சித்திரை திருவிழா தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெகு விமர்ச்சையாக இன்று (01.05.2026) நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் பொங்கல் வைக்கப்பட்டு, பசுமையை குறிக்கும் வகையில் மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு சாத்தப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்கார பொருட்கள் கொண்டு சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கண்ணகி தேவியினை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து வசதிகள், இரண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பளியன்குடி வழியாக கோவிலுக்கு நடந்துவரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் கருதி வழி நெடுகிலும் ஆங்காங்கே மருத்துவ கூடாரங்கள் அமைத்து, மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. மேலும், கூடுதலாக குளுக்கோஸ் பொடி, உப்புக்கரைசல் உள்ளிட்ட பொருட்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்பட்டது.
பக்தர்கள் அனைவருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு சுகாதாரமான குடிநீர், கழிப்பிட வசதி, போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், வாகன நெரிசலை ஒழுங்கு படுத்துவதற்காக
வழிநெடுகிளும் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு சீரான போக்குவரத்திற்கான பணிகளை மேற்கொண்டனர். பொதுமக்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு குமுளி பேருந்து நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான ஆண், பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், இரு மாநில வனத்துறையினர் வன விலங்குகளால் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் தடுப்பு வேலிகளை அமைத்து, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

0 Comments