சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் நாடு ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாட்டார் நகரத்தார் மற்றும் இளைஞர்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைபந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பட்டமங்கலம்- திருப்பத்தூர் சாலையில் பெரிய மாடு சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 9 ஜோடிகள்,சின்ன மாடு பிரிவில் 20 ஜோடிகள் என மொத்தம் 29 ஜோடிகள் பங்கேற்றன.
இதில் பெரிய மாடு பிரிவிற்கு 7 மைல் தூரமும்,சின்ன மாடு பிரிவிற்கு 5 மைல் தூரமும் எல்கைகளாக விழா குழு சார்பில் நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர். விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க தொகை மற்றும் குத்துவிளக்கு தென்னை மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியினை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் என வருகை தந்து உற்சாகதோடு கண்டுகளித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டமங்கலம் நாடு நாட்டார்கள் நகரத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

0 Comments