ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, அஞ்சுகோட்டை கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதினமிழகி அய்யனார், ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ ஆணிமுத்து கருப்பர் ஆலயங்களின் 37-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி பெருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அதிகாலை முதலே விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், கரையகோட்டை கருப்பர் கோயிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
பக்தர்கள் பால் காவடி, வேல் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வீதி உலா வந்து ஆலயத்தை வந்தடைந்தனர்.கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண அஞ்சுகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் அனைவரும் அய்யனைத் தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.



0 Comments