ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. மேயர் அறையில் முதலமைச்சர் விஜய் படத்தை வைப்பது தொடர்பாக தி.மு.க. மற்றும் தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. சார்பில் 48 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுக சார்பில் 6 உறுப்பினர்கள், காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உள்ளனர்.
அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் ஜெகதீஷ், தங்கவேலு, ஹேமலதா ஆகியோர் சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதேபோல் 43-வது வார்டு கவுன்சிலர் சபுராமாவும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் இன்றைய கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இன்று காலை நடைபெற்ற கூட்டம் தொடங்கியதும், ஜெகதீஷ், தங்கவேலு, ஹேமலதா மற்றும் சபுராமா ஆகியோர் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து, “இனி தமிழக வெற்றி கழகம் சார்பில் செயல்பட உள்ளோம்” என்று தெரிவித்து கடிதம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் படத்தை அவர்கள் வைத்தனர். பின்னர் மாநகராட்சி கூட்டரங்கிலும் விஜய் படம் வைக்கப்பட்டது.
இதையடுத்து மேயர் அறையிலும் முதலமைச்சர் விஜய் படத்தை வைக்க தமிழக வெற்றி கழக ஆதரவு உறுப்பினர்கள் முயற்சித்தனர். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, “இன்னும் ஒரு வாரத்திற்குள் மேயர் அறையில் முதலமைச்சர் படம் வைக்கப்படவில்லை என்றால் நாங்களே வந்து கண்டிப்பாக வைப்போம்” என்று தமிழக வெற்றி கழக ஆதரவு உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments