யாரையும் பழிவாங்கும் இடம் சபாநாயகர் அலுவலகம் அல்ல..... ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி பதில்

 


முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி அணியைச் சேர்ந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இன்று அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர், அவர்களின் ராஜினாமாக்கள் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அளித்த விரிவான பதில்கள் இதோ:

இசக்கி சுப்பையாவின் ராஜினாமா குறித்த கேள்விக்கு, “அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை என்னிடம் வழங்கியுள்ளார். சட்டமன்ற விதிகளின்படியும், சட்ட நடைமுறைகளின்படியும் அது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் சரியான முடிவை எடுத்து நிச்சயமாக அதனை முறைப்படி அறிவிப்பேன்.”

3 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது குறித்த எடப்பாடி பழனிசாமி தரப்பின் மனு குறித்த கேள்விக்கு, “இப்போதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பில் என்னிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அளித்துள்ள மூன்று பக்க மனுவில் குறிப்பிட்டுள்ள எல்லா விவரங்களையும் நான் படித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனை முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.நீதிமன்றம் செல்லப்போவதாக இன்பத்துரை கூறியது குறித்த கேள்விக்கு, “அவர்கள் என்னிடம் மனு அளித்த பிறகு, என்னுடைய முடிவிற்காகக் காத்திருக்கலாம் அல்லது அவர்களின் விருப்பப்படி நீதிமன்றத்திற்குச் செல்வது உள்ளிட்ட என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதைப்பற்றி நான் கருத்து கூற முடியாது. சபாநாயகர் என்ற முறையிலும், அவைத்தலைவர் என்ற முறையிலும் நான் எனது பணியைச் சீராக, செம்மையாகச் செய்து கொண்டிருக்கிறேன். இதில் யாரும் எனக்குக் காலக்கெடு விதிக்க முடியாது. சட்டத் திட்டங்களுக்கும், சபை விதிகளுக்கு உட்பட்டுத்தான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். அனைத்து நடவடிக்கைகளும் முறையாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கான தீர்ப்பு முறைப்படி வழங்கப்படும். என்னுடைய அதிகாரம் என்ன என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டமும், சட்டமன்ற விதிகளும் தெளிவாகச் சொல்கின்றன. அந்த விதிகளுக்கு உட்பட்டு நடக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.” என்றார்.

உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதற்கான பேரவை விதி என்ன?என்ற கேள்விக்கு, “பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக விரும்பும் ஒருவர், இதற்கான விதிகளில் உள்ள படிவத்தில் பேரவைத் தலைவருக்குத் தனது எண்ணத்தைத் தனது கைப்பட எழுதி, கையொப்பமிட்டுத் தெரிவிக்க வேண்டும். பேரவைத் தலைவர் ஒரு உறுப்பினரின் பதவி விலகலை ஏற்றவுடன், அச்செய்தியைத் தகவல் நாளிதழ்களிலும் அரசிதழிலும் கூடிய விரைவில் வெளியிட வேண்டும். இதுதான் விதி. அந்த அடிப்படையில் நேற்று 3 பேரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட உடனே, அது அரசிதழில் வெளியிடப்பட்டு முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசிதழிலில் நோட்டிகேஷன் வரும வரை அது முறைப்படியான ராஜினாமா அல்ல என்ற இன்பத்துரையின் வாதம் குறித்த கேள்விக்கு, “அவர்கள் வெளியில் என்ன வாதத்தை வேண்டுமானாலும் வைக்கலாம். நான் சபை விதிகளுக்கு உட்பட்டுத்தான் நடந்து கொண்டிருக்கிறேன். அதை மீறிச் செய்வதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகார வரம்பிற்குள் தான் நான் நடந்து கொள்கிறேன்.”


21 நாட்களில் எம்.எல்.ஏ-க்கள் வரிசையாக ராஜினாமா செய்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “அது அவர்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது. அது என்னுடைய ஆளுகைக்கோ அல்லது யோசனைக்கோ உட்பட்டது அல்ல. அவர்கள் விருப்பப்பட்டு வந்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தால், அது முறைப்படி இருக்கிறதா என்பதைப் பார்ப்பது மட்டும்தான் எனது வேலை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்தக் கடிதம் இருந்தால் அதனை ஏற்றுக்கொள்வது எனது கடமை. அந்தப் பணியைத்தான் நான் செய்துள்ளேன்.”


குதிரை பேரத்திற்கு சபாநாயகர் உதவுகிறாரா என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, “அது குறித்து எல்லாம் நான் எந்தப் பதிலும் சொல்ல விரும்பவில்லை. என்னைப்பொறுத்தவரை ராஜினாமா கடிதத்தை முறையாகக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், சட்ட விதிகளின்படி நடந்து கொள்ள வேண்டும். அந்த கடமையை நான் நிறைவாகச் செய்திருக்கிறேன்.”


எடப்பாடி பழனிசாமியை பழிவாங்குவதாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “”யாரையும் பழிவாங்கும் இடம் சபாநாயகர் அலுவலகமோ அல்லது சட்டமன்றப் பேரவையோ அல்ல. ஒரு உறுப்பினர் தனது சுய விருப்பத்தின்படி, அவராகக் கையொப்பமிட்டு ஒரு கடிதத்தை நேரில் வந்து அளிக்கும்போது, அது முறையாக உள்ளதா என்பதைப் பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டியது என் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன். அவர்களாக ஏதாவது கற்பனை செய்து கொண்டாலோ அல்லது ஊடகவியலாளர்களான நீங்கள் ஏதாவது கற்பனை செய்து கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பல்ல. எனக்கு எந்தப் பழிவாங்கும் உணர்ச்சியோ, யார் மீதும் கோபமோ, வெறுப்போ கிடையாது. நான் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இயங்குகிறேன்.”என்றார்.எடப்பாடி பழனிசாமி தரப்பு கொடுத்த கடிதத்தின் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, “அது ஆய்விற்கும் சட்ட நடவடிக்கைக்கும் உட்பட்டது. நிச்சயமாக அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும்” என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மிக உறுதியாகத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments