திருவாடானை அருகே மங்கள்குடி பகுதியில் சாலையை பெருமளவில் ஆக்கிரமித்து ஆபத்தான முறையில் அமைந்துள்ள மின் கம்பத்தை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்கள்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கி அருகே இந்த மின் கம்பம் அமைந்துள்ளது. சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள இந்த மின் கம்பத்தால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் இந்த மின் கம்பம் இடையூறாக இருப்பதால், விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே இப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மின்சார வாரியத்தின் சார்பில் மாற்று ஏற்பாடாக புதிய மின் கம்பம் ஒன்று அருகிலேயே ஊன்றப்பட்டது. ஆனால், புதிய கம்பம் ஊன்றப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும், பழைய மின் கம்பத்தில் உள்ள மின் இணைப்புகளைப் புதிய கம்பத்திற்கு மாற்றும் பணி இதுவரை நடைபெறவில்லை.
புதிய கம்பம் நட்டதோடு சரி, அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளாமல் மின்வாரிய அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
"புதிய கம்பம் நட்டு பல மாதங்களாகியும் பழைய ஆபத்தான மின் கம்பத்தை அகற்றாமல் இருப்பது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. ஏதேனும் பெரிய விபத்து நடப்பதற்குள், உடனடியாக மின் இணைப்புகளைப் புதிய கம்பத்திற்கு மாற்றி, சாலையை ஆக்கிரமித்துள்ள பழைய மின் கம்பத்தை அகற்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

0 Comments