தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளார் அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு செல்லப்படும் நிலையில், அணைக்கு மிக அருகில் உள்ள தேனி மாவட்ட கிராமங்கள் சொட்டு நீரின்றி தவித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எருமலைநாயக்கன்பட்டி, D.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டிஆகிய கிராமங்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு வழக்கமாக விநியோகம் செய்யப்பட்டு வந்த 'வைகை குடிநீர்' திட்டம் திடீரென எவ்வித அறிவிப்பு வந்தவுடன் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக இப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.
காய்ச்சல் பரவும் அபாயம் அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள்
சுத்தமான குடிநீர் கிடைக்காததால், பொதுமக்கள் வேறு வழியின்றி ஆங்காங்கே கிடைக்கும் சுகாதாரமற்ற தண்ணீரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அப்பகுதி சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்குப் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தினந்தோறும் அரசு மருத்துவமனைகளை நோக்கிச் செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.
வாழ்வாதாரம் பாதிப்பு – தினக்கூலிகளின் கண்ணீர்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது "நாங்கள் அன்றாடம் 200, 300 ரூபாய் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தும் ஏழை மக்கள். தற்போது குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லாமல், கூலிப் பணத்தில் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அடிப்படைத் தேவையான குடிநீரைக் கூட அரசு முறையாக வழங்காததால் எங்கள் வாழ்வாதாரமே முடங்கியுள்ளது. மஞ்சளார் அணை நீர் பக்கத்து மாவட்டத்திற்கு தடையின்றிச் செல்லும்போது, அணைக்கு அருகில் இருக்கும் எங்களுக்கு ஏன் இந்த வஞ்சனை?" என மனவேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?
இப்பகுதியில் வாழும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு,தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, அதிரடியாகக் களமிறங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீரமைத்து வழங்கினால் மட்டுமே, இப்பகுதி மக்களின் நோய் பாதிப்பும், வாழ்வாதாரத் துயரமும் நீங்கும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments