நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டாரத்திற்கு உட்பட்ட வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில், மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மலேரியாவை ஒழிக்க தீர்மானிப்போம். இப்போதே நம்மால் முடியும், இப்போதே செய்திடுவோம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த முகாம், மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
நாகை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப்.வி.கிருஷ்ணகுமார் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மலேரியா அலுவலர் வீரய்யா மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சேஷாத் ஆகியோர் கலந்து கொண்டு, மலேரியா பரவும் விதம், தடுப்பு முறைகள் மற்றும் சமூகத்தின் பங்கு குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கமளித்தனர்.
இந்த முகாமில் பங்கேற்ற சுமார் 400 மாணவ மாணவிகளுக்கு, தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி அல்போன்ஸ் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செந்தில்குமார் முன்னிலையில், மாணவர்கள் மலேரியா எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இம்முகாம் மற்றும் பேரணி ஏற்பாடுகளை வேளாங்கண்ணி சுகாதார மேற்பார்வையாளர் சு.மோகன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ராஜு, குணசீலன் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


0 Comments