மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், புதிய காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி நாகை மாவட்ட கடைமடை விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜூன் 19 தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தின் நான்காவது பக்கத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான அம்சம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாகை மாவட்ட கடைமடை விவசாயிகள், ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி காவிரி நடுவர் மன்றத்தை பெற்ற நிலையில், தற்போது புதிய நடுவர் மன்றம் அமைப்பது அந்த உரிமையை சிதைக்கும் நடவடிக்கையாகும் என குற்றம்சாட்டினர்.
கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அடுத்த மகிழி பகுதியில் உள்ள வயல்வெளியில் திரண்ட விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் எஸ். ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கீழையூர் நடைமடை பாசன விவசாய சங்க தலைவர் வீ. மணிவண்ணன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.மேலும், தற்போதுள்ள காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகளையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும், புதிய நடுவர் மன்றம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கீழையூர் கடைமடை விவசாய சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், முருகானந்தம், ஞானசம்பந்தம்,கோவி.ஆறுமுகம் உள்ளிட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

0 Comments