நாகை மாவட்டம் திருக்குவளை தாலுக்கா கீழக்கண்ணாப்பூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ பர்வத வர்த்தினி உடனுறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த ஜூலை 10ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இரண்டு கால யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. அதன் பின் மகா பூர்ணாஹூதி நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவவாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க, யாகசாலை இருந்து புனித நீர் கொண்ட கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூலவர் அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கொண்டனர்.விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்




0 Comments